சென்னை: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற கூட்டம், நேற்று (ஏப். 9) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
முதல் பட்ஜெட் உரை வாசித்த பிரியா ராஜன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து 2022- 2023 ஆண்டு மாநகராட்சி வரவு செலவு பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் மேயர் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்களின் மாடு மேம்பாட்டு நிதிக்கு 35 லட்சம் போதாது 50 லட்சமாக உயர்த்த வேண்டும் என கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்தார். அதனை மேயர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்வதாக துணை மேயர் தெரிவித்தார்.
ஆலந்தூர் மண்டலத்தில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருக்கிறது. சொத்து வரி உயர்வை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று ஆலந்தூர் மண்டல குழு தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்தார். சொத்து வரி உயர்வை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் முதலமைச்சரிடம் பேசியுள்ளார். நிச்சயம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று துணை மேயர் மகேஷ்குமார் பதிலளித்தார்.
சம்பிரதாயமாக விவாதம் செய்ய வேண்டாம்: வார்டு-42 உறுப்பினர் ரேணுகா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) பேசுகையில், "மாநகராட்சி நிதி நிலை அறிக்கையின் மீது உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனே விவாதம் நடத்துவது ஏற்புபைடையதல்ல. உறுப்பினர்களின் விவாதம் சம்பிரதாயமாக இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இன்றைய நிதி நிலை அறிக்கை மூலம் மாநகராட்சி ரூ.788 கோடி வருவாய் பற்றாக்குறையாக உள்ளது. ஆனால் மாநகராட்சியின் கடன் விவரம் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மக்களிடம் அதிக சொத்துவரி வசூலித்து அதன் மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடுவது சரியல்ல.
குறிப்பாக சொத்து வரி வசூலித்தல் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் மாநில அரசு சொத்து வரியை உயர்த்தி அரசாணை நிறைவேற்றி உள்ளது. இது உள்ளாட்சி அதிகாரத்தை மீறும் செயல்" என்று கூறினார்.
அப்போது 14ஆவது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், ரேணுகாவின் பேச்சை இடைமறித்து கோரிக்கையை மட்டும் பேசுமாறும் எதிர்க்கட்சியை போன்று பேச வேண்டாம் என்றும் வாக்குவதாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ரேணுகா தனது கோரிக்கைகளை கூறினார். ரேணுகா பேசி முடித்த பின்னர், அடுத்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாள்கள் நடைபெறும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம்: பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் தேவை என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த துணை மேயர் மகேஷ்குமார், ”மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் பேசி பஞ்சாயத்ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சி செய்வோம்” என்று கூறினார்.
இதனிடையே காங்கிரஸ் மன்ற உறுப்பினர்கள் பேசும்போது மத்திய அரசிடம் காலில் விழுந்து கடந்த அரசு பல்வேறு சலுகைகளை பெற்றதாக கூறினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அதிமுக மன்ற உறுப்பினர் சத்தியநாதன் உள்ளாட்சித் தேர்தலில் 5, 6 சீட்டுகளுக்காக அறிவாலயம் வாசலில் நின்றார்கள் என்று காங்கிரஸ் கட்சியினரை விமர்சனம் செய்தார்.
அப்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூச்சலிட்டு மேஜைகளை தட்டியவாறு, திமுகவும் நாங்களும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்றனர். அப்போது குறுக்கிட்டு பேசிய துணை மேயர், அமைதியாக நடைபெறும் அவையில் அரசியல் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இரு தரப்பினர் வாதத்தை நிறுத்தினார்.
அவையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என்று 39 வார்டு உறுப்பினர் ஜீவன் மன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்தார். அத்துடன் “வரலாற்று சிறப்பு மிக்க அவை இது. சபை உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம். அவர்கள் கருத்தை அவர்கள் பதிவு செய்யட்டும். அதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. சபைக்குள் நடக்க வேண்டிய விஷயங்களை பேசுங்கள். மாற்று கட்சி தலைமையை அநாகரீகமாக பேசுவதை தவிருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.