சென்னை: சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சென்னை மாநகரின் அழகை சீர்குலைத்து வருகின்றன. இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது.
18,593 சுவரொட்டிகள் அழிப்பு
அதன்படி கடந்த மூன்று நாள்களில் 18 ஆயிரத்து 593 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. வடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் 4 ஆயிரத்து 523, மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 7 ஆயிரத்து 194, தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 6 ஆயிரத்து 876 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் இன்று (ஜூலை 10) மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 809 சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு