"வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்" என்ற இலக்கினை அடைய மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டலம் வாரியாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்" என்ற இலக்கினை பெருநகர சென்னை மாநகராட்சி அடைய தீர்மானிக்கப்பட்டு, பொதுசுகாதாரத் துறை, கால்நடை மருத்துவப் பிரிவின் கீழ் மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி திட்டம் மற்றும் மண்டல வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதுவரை, மாதவரம் மண்டலத்தில் 8,846 நாய்களுக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் 8,243 நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்துகையில், பொதுமக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதன்மூலம் வெறிநாய்க்கடி நோய் மற்றும் அக, புற ஒட்டுண்ணி தாக்குதலிலிருந்து தெரு நாய்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது” என்றார்.