கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானப் பயணிகளுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது. கரோனா பரவல் தொற்று படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை தளா்த்தப்பட்டது. கடந்த அக்டோபா் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, கரோனா பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தால், சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை கிடையாது என்ற விதிமுறையை சுகாதாரத்துறையினா் அமல்படுத்தினா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது.
மேலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா தொற்றுப் பரவலும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (பிப்.23) காலையில் இருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
இதில், அமெரிக்கா, சிங்கப்பூா் நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழை காட்டிவிட்டுச் செல்லலாம். துபாய், சாா்ஜா, அபுதாபி, குவைத், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரத்து 200 ரூபாய், 2 ஆயிரத்து 500 ரூபாய் என இரண்டு விதமான கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள், சுகாதாரத்துறையினா் கண்காணிப்பில் விமான நிலையத்தில் இருப்பாா்கள். கரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்தப் பயணி உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவாா்கள் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’விலங்குகளிடம் கருணை காட்டாத யாருக்கும் நாமும் கருணை காட்டக்கூடாது'