இது குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவருக்கு ஜூன் 11ஆம் தேதி, கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் 108 ஆம்புலன்ஸில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர், 8 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றிதிரிந்தும் அதன்பின் மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவாகிஉள்ளது. ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. யாரையும் தொடர்பும் கொள்ளவும்மில்லை.
அதனால் அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை அறிக்கை கேட்டால் வழக்கு விவரங்களை ஒரு காவல்நிலையத்திலிருந்து, மற்றொரு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் என இழுத்தடிப்பு செய்கிறார்கள்.
வழக்கின் விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்று விட்டதையும், வழக்கு விசாரணை தொடங்கிவிட்டதையும் நாளை (ஜூலை15) நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று இன்றைய விசாரணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மாநகராட்சி ஊழியர் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.
மருத்துவமனையில் அவரை இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குறிப்பிட்ட நபரிடம் தகவல் அளித்து அனுமதிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அவர் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டவுடன் காவல்துறை விரைந்து விசாரணையை தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. தந்தையை ஒரு குடும்பம் இழந்து நிற்கிறது. ஆபத்தான கரோனா நோயாளி வெளியில் சுற்ற அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு யார் பொறுப்பு? இது போல் மேலும் எத்தனை பேர் தமிழகத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள்?
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு பதிலளிப்பாரா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி' - அமைச்சர் விஜய பாஸ்கர்