சென்னை காவல் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியின் போது இறந்த காவலர் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் பள்ளி, கல்லூரி படிப்புக்கு சென்னை காவல்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. அந்த வகையில் பணியின் போது இறந்த காவலர்கள் குடும்பத்தில் உள்ள 96 பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவியரின் படிப்புச் செலவுக்காக jito (jain international trade organization) என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ரூபாய் 10 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலையை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.
தொழில் சார்ந்த மேற்படிப்புக்கு 13 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் என ரூ. 3,25,000, இளங்கலை படிப்புக்காக 14 மாணவ, மாணவியர்ளுக்கு தலா 15 ஆயிரம் வீதம் ரூ. 2,10,000, கல்லூரி முதுகலை படிப்புக்காக ஒரு மாணவருக்கு ரூபாய் 15,000, டிப்ளமோ படிப்புக்கு இரண்டு மாணவர்களுக்கு தலா 15,000 வீதம் என ரூபாய் 30,000, பள்ளி படிப்புக்கு 66 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூபாய் 7,500 வீதம் ரூ. 4, 95,000 என மொத்தம் ரூபாய் 10,75,000க்கான காசோலையை மாணவ மாணவிகளிடம் காவல்துறை ஆணையர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “பணியின் போது இறந்த காவலர் குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் 96 நபர்களின் படிப்புக்கு ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், காவலர்களின் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியர்களின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராயபுரத்தில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து, குழந்தையை காவல் துறையினர் மீட்டனர். அதுமட்டுமின்றி குழந்தையை கடத்தியவரை தனிப்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்” என்றார்.
மேலும், சிறார் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது, மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அந்தந்த காவல் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கணக்கெடுத்து வருவதாகவும், சிறார் குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக நல்வழி பயிற்சி கொடுக்கவிருப்பதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இதையும் படிங்க...மோடி அமைச்சரவையிலிருந்து விலகும் பெண் அமைச்சர்: காரணம் என்ன?