போலியான சான்றிதழ்கள் தயாரித்து லோன் பெற்ற பெண் கைது: மேற்குத் தாம்பரம் கன்னடபாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50) - சித்ரா (45) தம்பதி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேசனின் மனைவி சித்ரா, அவரது பெயரில் ஆன்லைனில் தனியார் செயலி மூலமாக லோன் அப்ளை செய்துள்ளார்.
இதையடுத்து, சில நாட்கள் கழித்து பைசா பஜார் நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறி திவ்யா என்பவர் வெங்கடேசனின் வீட்டிற்கு வந்து, அவரது மனைவியின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை வாங்கி சென்றுள்ளார். ஆனால் சித்ரா அவருக்கு பைசா பஜார் செயலி மூலமாக லோன் ஏதும் கிடைக்கவில்லை என வெங்கடேசனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனியார் லோன் அளிக்கும் செயலி நிறுவனத்திலிருந்து வெங்கடேசன் வீட்டிற்கு வந்த நபர், உங்கள் மனைவி சித்ரா பெயரில் லோன் ஆப் மூலமாக ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இதற்கு இ.எம்.ஐ கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் - சித்ரா தம்பதி, இது குறித்து விசாரணை செய்தபோது, பைசா பஜார் லோன் ஆபில் பணிபுரியும் திவ்யா என்கிற சித்ரா என்பவர், இவர்களது பெயரில் போலியாகச் சான்றிதழ்களைத் தயாரித்து லோன் பெற்றது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வெங்கடேசன் - சித்ரா தம்பதி இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போலி சான்றிதழ்களைத் தயாரித்து மற்றவர்கள் பெயரில் லோன் பெற்ற சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்கிற சித்ராவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணி பிரசவத்தில் உயிரிழப்பு; உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகை: சென்னையை அடுத்த ரெட் ஹில்ஸ் பாடிய நல்லூர் பாலகணேசன் நகர் 4வது தெருவில் வசித்து வருபவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27) கர்ப்பமாக இருந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை குறித்து, இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தைப் பார்த்து பிரசவத்திற்காக அங்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி, அஜித்தின் மனைவி சுகன்யாவிற்குப் பிரசவ வலி ஏற்படவே, அன்று மதியம் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அங்கு, பிரசவத்திற்காக அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த சமயம், திடீரென சுகன்யாவிற்குத் தொடர்ச்சியாக வலிப்பு வந்த நிலையில், சுகன்யா மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாகவும், ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் நிலைமையைக் குறித்து தற்பொழுது எதுவும் கூற முடியாது என மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, வேறு மருத்துவமனை கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யா உடன் வந்த உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித் இடம் மருத்துவமனை தரப்பில் வற்புறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.24) மாலை சுகன்யா உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகன்யாவின் உறவினர்களை அழைத்து மருத்துவமனை தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, சுகன்யாவின் கணவர் அஜித், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போலீசாரிடம் புகார் மனுவை அளித்தார். இதுதொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான இருவர் கைது: கடந்த ஆண்டு சென்னை கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலையில், இருவர் தீபாவளி பண்டு சீட்டு, பரிசு சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். அதில் சுமார் 37 நபர்களிடம் இருந்து ஒரு கோடியே 41 லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை வசூலித்து, திடீரென்று பண்டு நடத்துவதை நிறுத்திவிட்டுத் தலைமறைவாகி உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு நித்யானந்தம் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவில் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மைனர் என்ற விக்னேஷ், விஜி என்ற பிரகாஷ் ஆகியோர் நேற்று (நவ.24) கைது செய்யப்பட்டனர். மேலும் அரசின் அனுமதி பெறாமல், போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்யும் இது போன்ற நபர்களை நம்பி, பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தங்கக் கட்டியுடன் மாயமான நகைப் பட்டறை ஊழியர் கைது: சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (41). இவர் யானை கவுனி பகுதியில் தங்க நகை செய்யும் நகைப் பட்டறையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், “தனது கடையில் பணிபுரிந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்த் (37) என்பவரிடம், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, 65 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டியைக் கொடுத்து, அதை உருக்கித் தங்கக் கம்பிகளாக மாற்றி வர அனுப்பினேன்.
ஆனால் அவர் திரும்பி வரவில்லை. பின்னர் தான் அவர் தலைமறைவானது தெரியவந்தது” எனப் புகாரில் தெரிவித்து இருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், தற்போது தலைமறைவாக இருந்த நகைக்கடை ஊழியர் ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!