சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் ராமு, ஆயுதப்படை சக்திவேல், ஊர்காவல்படை அண்ணாதுரை ஆகியோர் நேற்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நள்ளிரவு 2.30 மணியளவில், ஒரு பகுதியில் மூன்று முறை சுற்றி சுற்றி வந்த நபர் மீது சந்தேகமடைந்த அவர்கள், அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.
ஆனால், இவர்களைப் பார்த்தவுடன் அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர், காவலர்கள் தங்களின் வாகனத்தில் பின் தொடர்ந்ததையடுத்து, கையில் இருந்த மூன்று பைகளை கீழே போட்டுவிட்டு அவர் தப்பியுள்ளார். காவலர்கள் அதனை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்துள்ளது.
இந்நிலையில், இரவு நேர ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்டு பெரும் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ள காவலர்களை இன்று நேரில் அழைத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் வெகுமதி வழங்கியும் ஊக்குவித்தார்.