போதை மறுவாழ்வு மையத்தில் கண்ணீர் விட்ட குடிமகன்கள்: நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக பல போதை மறுவாழ்வு மையங்கள் மூலைக்கு மூலை இயங்கி வருகின்றது. அந்த வகையில், ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் பிரதான சாலையில் Insight Rehabs என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக போதைக்கு அடிமையானவர்களை மீட்டு மறு வாழ்வு அளிப்பதாகக் கூறி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் ஒருவருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென போதை தடுப்பு மறு வாழ்வு மையத்தில் அடிக்கிறாங்களே, கொல்றாங்களே, காப்பாத்துங்க, காப்பாத்துங்க..! என அலறி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அருகில் உள்ளவர்கள் மறு வாழ்வு மையத்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் 30க்கும் மேற்பட்டோரிடம் கேட்ட போது, அவர்கள் “தயவு செய்து கொஞ்சம் போன் கொடுங்கள் எங்களை இங்க கொல்றாங்க” என கதறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அதில் ஒருவருக்கு செல்போனை கொடுக்க அவர் தனது உறவினர்களுக்கு போன் செய்து “என்ன இங்க அடிக்கிறாங்க, என்ன வந்து கூட்டிட்டு போய்டுங்க” என கதறி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து, நேரில் வந்து நடப்பதை கண்ட உறவினர்கள் ஆதம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து சம்பவ இடம் வந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் மறு வாழ்வு மைய உரிமையாளரிடம் பேசி விட்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிருப்தியடைந்த உறவினர்கள், மறு வாழ்வு மையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபரின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவரை அழைத்து சென்றனர்.
பின் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், இந்த மறுவாழ்வு மையத்தில் அடி உதை என கொடுமை படுத்துவதாகவும், இரவு நேரங்களில் நான்கு ஐந்து பேர் வந்து கொடூரமாக அடிப்பதாகவும் கூறினார். மேலும் சுகாதாரமற்ற உணவு, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராமல் ஒரு சிறை போன்ற கட்டமைப்பில் மறு வாழ்வு சிகிச்சைக்கு வருபவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் ஆபத்து காலங்களில் அவர்களால் வெளியேற கூட முடியாத சூழல் இருப்பதாகவும் அங்கு பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகின்றனர்.
மேலும் அக்கம்பக்கத்தினர், இந்த போதை மறு வாழ்வு மையத்திற்கு உரிய அனுமதி இல்லை எனவும் இது சட்டவிரோதமாக செயல்படுவதாகவும், சமூக நலத்துறையினர் இந்த மையத்தினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
போதை வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது: குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (23). இவர் ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைதானவர். தற்போது மீண்டும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சங்கர் நகர் ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவரது நண்பரான யோவான் (32), என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா, மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க ஆந்திரா சென்றுள்ளது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் கண்காணித்தனர். போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்குள் யோவான் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி போரூர் ஐயப்பந்தாங்கல் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அவர் வீட்டிற்கு சென்றதும் அங்கு சோதனையிட்டனர்.
சோதனையில் வீட்டில் 2000 வலி நிவாரணி மாத்திரைகள், சிரஞ்சி, 1.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் யோவானை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆந்திராவில் இருந்து வலி நிவாரணி மாத்திரை, கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!