சென்னை: கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர், திருமுருகன் (45). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவர் காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் போது கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே பின்னால் வந்த கார் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் திருமுருகன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஸ்ரீஷிவ் விக்ரம்(18) என்ற இளைஞர் 'ஜாலி ரைடு சென்று வரலாம்' என்று நண்பர்களிடம் நேற்று இரவே தெரிவித்துள்ளார். அப்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ஸ்ரீஷிவ் விக்ரம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும்; இவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று வீட்டிற்குச் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதாகவும்; மேலும் ஸ்ரீ ஷிவ் விக்ரம் தற்போது LLR எனப்படும் பழகுநர் சான்றிதழ் மட்டுமே வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீஷிவ் விக்ரமுக்கு உள் காயங்கள் இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் பயணித்த அவரது நண்பர்கள் மூன்று பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எம்.கே.பி.நகர்: இதனைத்தொடர்ந்து நேற்று இரவு, சென்னை எம்.கே.பி நகர் சிக்னல் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் பயணித்த நபர் முறையான ஆவணங்கள் இன்றி 15 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 18ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். இந்த விசாரணையில் சவுகார்பேட்டை திருப்பலி தெருவைச் சேர்ந்த மகேந்திர சவுத்ரி(25) என்பவர், நகைகளை சவுகார்பேட்டையில் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான அம்பிகா ஜுவல்லர்ஸ் நகைக் கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்ட காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரவள்ளூர்: வெற்றி நகர் பகுதியில் முத்து ஸ்டோர் என்ற மளிகை கடையை காமராஜ் நடத்துகிறார். வழக்கம்போல், கடையை மூடிவிட்டு அதிகாலையில் கடையைத் திறந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். மேலும் கடையில் இருந்த ஐந்து அரிசி மூட்டைகள், பணம் ரூ.40,000, ஒரு செல்போன் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதே போல அய்யாளூர் தெருவில் அதிமுக பிரமுகர் பழனி என்பவரின் மளிகைக் கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு 7000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி: லால்முகமது தெருவைச் சேர்ந்தவர் திமுக நிர்வாகி பிரேம்ராஜா(35). இவரது வீட்டில் 2 மணி நேரம் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் பிரேம்ராஜாவை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவரின் நெருங்கிய நண்பர் பிரேம்நாதன் வழக்கு ஒன்றில் கைது செய்தப்பட்டார். அப்போது நடத்திய விசாரணையில் பிரேம்ராஜா அதிக நேரம் பிரேம்நாதனுடன் செல்போனில் பேசியது தெரியவந்ததையடுத்து பிரேம்ராஜா வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஏஆர்டி நிறுவன மோசடி: நிறுவனர்களின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி!