சென்னை: பெருங்களத்தூரில் சுற்றியுள்ள பகுதிகளிலும், பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்மல் ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கஞ்சா விற்று வருவதாக சங்கர் நகர் காவல் ஆய்வாளர் பர்க்கத்துல்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கர்நகர் உதவி ஆய்வாளர் செல்வமணி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து கஞ்சா விற்று வரும் நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் கஞ்சா வாங்க வந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கஞ்சா விற்க வந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பினனர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், புது பெருங்களத்தூர் குண்டுமேடு அன்னை தெரசா தெருவை சேர்ந்த ரியாஸ்(27) என தெரியவந்தது.
மேலும், பெருங்களத்தூரில் சுற்றியுள்ள பகுதிகளிலும், பல்லாவரம், அனகாபுத்தூர்,பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர் குண்டுமேடு சுடுகாடு பகுதியில் கஞ்சாவை புதைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுவந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் நான்கு கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.