சென்னை: வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் வாங்குவதற்கு கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். மறுப்புறம் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு, பரிசுகள் வழங்கி அசத்திவருகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த நகைக்கடையின் உரிமையாளர் ஜெயந்தி லால் சயந்தி என்பவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியுள்ளார்.
ஆனால், மிக அடம்பரமாக 1.2 கோடி ரூபாய்க்கு போனஸ் வழங்கி அசத்தியுள்ளார். அதாவது 1.2 கோடி ரூபாய் செலவில் 8 கார்கள் மற்றும் 18 பைக்குகளை வாங்கி ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து ஜெயந்தி லால் சயந்தி கூறுகையில், “இது அவர்களின் (ஊழியர்கள்) வேலையை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
எனது தொழிலில் உண்டான ஏற்றத் தாழ்வுகள் அனைத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி, எனக்கு லாபம் ஈட்ட உதவியவர்களுக்கே நான் நன்றிகடன் செய்துள்ளேன். அவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, எனது குடும்பமும் கூட. அவர்களுக்கு இதுபோன்ற ஆச்சரியங்களைக் கொடுத்து எனது குடும்ப உறுப்பினர்களைப்போல நடத்த விரும்பினேன். இப்போது நான் முழு மகிழ்ச்சி உடன் இருக்கிறேன்.
ஒவ்வொரு நிறுவன உரிமையாளரும் தங்கள் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை மதிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும் வேண்டும்” என தெரிவித்தார். இந்த கார், பைக்குகளை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த ஆனந்தக் கண்ணீரில் திளைத்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி போனஸ் கொடுக்காததால் ஆத்திரம்; கடை முன் குப்பையை கொட்டிய சுகாதாரப் பணியாளர்