சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 19ஆம் தேதி அதிகாலை கஞ்சா, பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவலர்கள் கைது செய்து முதலில் அயனாவரம் காவல் நிலையத்திற்கும், பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி காலை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தாக்கியதே விக்னேஷின் மரணத்துக்குக் காரணம் என்று குடும்பத்தார் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்: இதனிடையே உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் பவுன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சரவணன் நியமிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக சம்பவ இடமான தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அங்கு ஆய்வு நடத்தி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து சம்பவம் சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார், அவரிடம் கடந்த மே 4ஆம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதேபோல தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரும் வழக்கு ஆவணங்களுடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில், விக்னேஷ் உடலில் தாக்கப்பட்டதற்கான 13 காயங்கள் இருந்ததாகவும், குறிப்பாக அவரது தலையில் 1 செ.மீ அளவில் துளை போன்ற காயம் இருந்ததாகவும், இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
9 பேரிடம் 24 நேரத்திற்கு மேலாக விசாரணை: அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விக்னேஷ் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். பின்னர் நேற்று முன் தினம் தலைமை செயலக காலனி காவல் நிலையம் சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு வைத்து ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட காவல் துறையினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படை வீரர் தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, நிலைய எழுத்தர் முனாஃப், வாகன ஓட்டுநர் கார்த்திக், தலைமை காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி ஆகிய ஒன்பது பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி, நேற்று (மே 6) காலை சுமார் 11 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரத்தைக் கடந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து காவலர்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு நேற்று பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஒன்பது காவல் துறையினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இரண்டு விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து சிபிசிஐடி போலீசார் அவர்களை நேற்று(மே 6) கைது செய்தனர்.
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது: குறிப்பாக வாகன சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து முனாஃப் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊர்காவல் படை வீரர் தீபக், தலைமை காவலர் குமார் மற்றும் இரு காவல் துறையினர் என்று மேலும் நான்கு பேரை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் இன்று(மே 7) கைது செய்துள்ளனர். மொத்தம் ஆறு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விக்னேஷ் லாக்கப் மரணம்.. ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்