சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3D பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்னும் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான சாட்லைட்டுகளை மட்டுமே அனுப்பிவரும் நிலையில், இந்த 'அக்னிபான் ராக்கெட்' மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான சாட்லைட்டுகளையும் விண்ணில் ஏவ முடியும்.
பின்னர், விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் அதனை நிலைநிறுத்தவும் முடியும். இதனால் எதிர்காலத்தில் விண்வெளி துறையில் எளிதில் குறைவான செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். முதல் முறையாக இஸ்ரோவில் இதற்கான ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த ராக்கெட் எஞ்சின் 3 டி பிரிண்டிங் முறையில் செய்யப்படுவதால் செலவு குறைவாகவும் உள்ளதால் இதனை வேகமாகவும் செய்ய முடியும்.
இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் பாகம் 3 டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு, தற்பொழுது தையூர் வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னையை தளமாகக் கொண்ட ராக்கெட் ஸ்டார்ட்அப் அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆந்திராவில் உள்ள தனது ஏவுதளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒருபகுதியாக, ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக இன்று (ஆக.17) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட தகவலில், கடந்த ஆக.15ஆம் தேதி 'அக்னிபான்' ராக்கெட்டின் பாகங்கள் ஒருங்கிணைப்பு செயல்முறையைத் தொடங்கியதாகவும், (Agnibaan SOrTeD - Suborbital Technological Demonstrator) இது அக்னிகுலின் காப்புரிமை பெற்ற அக்னிலெட் இயந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் (a single-stage launch vehicle) ஆகும். இது முற்றிலும் 3D-அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 kN அரை-கிரையோஜெனிக் இயந்திரம் ஆகும்.
இந்த ராக்கெட் தீர்மானிக்கப்பட்ட இதன் வழித்தடத்தில் இருந்து ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்டாரப் பாதையில் பயணிக்கும். இதற்கான பணிகளின்போது, வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் ராக்கெட் வலம் வருவதற்காக சிறந்த தொழில்நுட்பங்கள் இதற்காக கையாளப்பட்டுள்ளன. மேலும் இந்த பணிகளை இன்னும் ஒரிரு வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 25, 2022 அன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்தியாவின் முதல் ஏவுதளம் மற்றும் பணிக் கட்டுப்பாட்டு மையம் அக்னிகுல் திறக்கப்பட்டது. இது விண்வெளி பயணத்தின் போது அதிநவீன வசதியுடன் துணை சுற்றுப்பாதையில் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இது குறித்து அக்னிகுலின் திட்டத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO, ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகையில், 'துணை சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தில் இந்த அக்னிகுல் தன்னியக்க பைலட் வெற்றியின் சரிபார்ப்பு, வழிகாட்டுதல் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் இன்றியமையாதது' என்று தெரிவித்துள்ளார். இந்த அக்னிகுல், ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மொயின் எஸ்பிஎம் மற்றும் பேராசிரியர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி ஆகியோரால் 2017-ல் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விண்ணில் பாய தயாராகும் அக்னிகுல்..! 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரான ராக்கெட் எஞ்சின்