சென்னை: ஆவடி இஞ்ஜின் தொழிற்சாலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, திருமாவளவன் மணி விழா, அம்பேத்கர் தொழிலாளர் சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருடனும் கொண்டாடினார். பின்னர் முப்பெரும் விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுதொகையை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மகளிர் உரிமை தொகை குறித்த கேள்விக்கு, “எந்தவொரு திட்டமாக இருந்தாலும் வரையறை உருவாக்குவார்கள் தான் என கூறியவர், அண்ணாமலை, அரசுக்கு எதிராக ஏதாவது கூறவேண்டும் என பேசி வருகிறார். தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வைத்து வருகிறார் அண்ணாமலை என குற்றம்சாட்டினார்.
இந்திய அளவில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிசீலனை செய்கின்றனர். பலரால் வரவேற்கக் கூடிய சிறப்பு திட்டமாக இது உள்ளது. இதனால் பாஜகவினர் பொறுத்துக் கொள்ள முடியாமல் விமர்சித்து வருகின்றனர். இந்த ஆளுனர் ஆர்.என். ரவி எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். பாஜக ஆளாத மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அவர்களது முயற்சி பலிக்காது, முதலமைச்சர் கடுமையாக எதிர்த்து வருகிறார். ஜனநாயக சக்திகள் அனைவரும் அவருக்கு உற்ற துணையாக இருப்போம் என தெரிவித்தார். விரைவில் 90 எம்எல் மது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, மது விலக்கு நடைமுறைபடுத்த வேண்டும் என்பது தான் விசிகவின் நிலைப்பாடு. இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஆவடி ராணுவ தொழிலாளர்களின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பொது மேலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து விரைவில் பதவி உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் உறுதி அளித்து உள்ளதாக தகவல் தெரிவித்தார்.