சென்னை: ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன், கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள் மற்றும் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் (25) என்ற மகன் உள்ளார். பாடி பில்டிங்கில் ஆர்வமுள்ள ஆகாஷ் கடந்த 5 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆகாஷ் நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (gym trainer) பணியாற்றி வந்தார். மேலும் மாவட்ட அளவிலான பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஆகஷ் உடற்பயிற்சி கூடத்தில் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டு கிட்னியும், ஈரல் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். 26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற ஆகாஷ் கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வர ஸ்டிராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து சபரி முத்து உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து உடற்பயிற்சி வல்லுனர்கள் கூறுகையில் தற்போதுள்ள இளைஞர்கள் குறுகிய காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக அமைத்து ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள அதிகப்படியான சப்லிமெண்ட் மற்றும் ஸ்டிராய்டு ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உடல் உறுப்புக்கள் செயல் இழந்து உயிர் இழப்பு நேரும் என்று கூறுகின்றனர். இது போன்று தான் ஆகாஷும் அதிகப்படியான ஸ்டிராய்டு ஊசி மற்றும் மருந்துகளை பயன்படுத்தியதன் விளைவாக உயிர் இழப்பு நேர்ந்து இருகலாம் என தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஆகாஷ் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் ஆகாஷ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடலை ஏற்ற ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்தி வந்ததாகவும் இதனால் கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்து அது இதயத்தை பாதித்து உயிர் இழப்பு நேர்ந்துள்ளது என்றனர். கரோனா பாதிப்புக்குப் பிறகு, உடல் நலம் பேணுவது குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனினும், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி, பின்பற்றப்படும் உடற்பயிற்சியும் எதிர்மறை விளைவுகளைத் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.