சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 301 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 73 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் இன்று இரவு வரை பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து சான்றிதழ்களை ஜூன் 9 ந் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 908 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 83 மாணவர்கள் கட்டணம் செலுத்தினார்கள். ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு 17ஆயிரத்து 126 மாணவர்கள் கூடுதலாகக் கட்டணங்களையும் செலுத்தி உள்ளனர்.
மேலும் விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ரேண்டர் எண் ஜூன் 6ஆம் தேதி வழங்கப்படும். தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்படும்போது 2 மாணவர்கள் ஒரே தவரிசைப்பட்டியலில் வந்தால் அப்போது இந்த ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் சரிபார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
தரவரிசைப்பட்டியல் வெளியிட்ட பின்னர் மாணவர்கள் அவற்றில் திருத்தம் எதுவும் இருந்தால் ஜூன் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களில் சென்று சரி செய்துக் கொள்ளலாம். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் சிறப்பு பிரிவினர்களான மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் 4 சுற்றுக்களாக நடைபெறுகிறது.
முதல் சுற்றுக்கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2ஆம் சுற்று ஜூலை 19 முதல் 31 வரையிலும், 3ஆம் சுற்று ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையிலும், 4ஆம் சுற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. ஒவ்வொறு சுற்றிலும் விருப்பமுள்ள இடங்களை பதிவு செய்து பணம் செலுத்துவதற்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. 4வது நாள் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 5ஆம் நாளுக்குள் தற்காலிக ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
6 வது ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதோ அல்லது மேல்நோக்கிய நகர்வுக்குச் செல்வதையோ உறுதிச் செய்ய வேண்டும். கல்லூரிக்கான ஒதுக்கீட்டை பெற்றப்பின்னர் 4 நாட்களில் சேர வேண்டும். அதில் ஏற்படும் காலியிடங்களுக்கு மேல்நோக்கி நகர்வில் விரும்பும் கல்லூரியைக் கேட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் துணைக்கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையில் ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேராமல் உள்ள காலியிடங்களில், ஆதிதிராவிடர் பிரிவினரை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையும் படிங்க: Anna University: பிஇ, பிடெக் படிப்பு 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம்