சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் இதுவரையில் அவர்கள் வருகை பகுதி (arrival) வழியாக வெளியில் வந்து பின்பு புறப்பாடு (departure) பகுதிக்கு சென்று தான் பயணிக்க வேண்டும்.
மிக முக்கிய விவிஐபி பயணிகள் தவிர மற்ற சாதாரண பயணிகள் அனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது. இதனால் உள்நாட்டு விமான பயணிகளில் விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் பல்வேறு நேரங்களில் தங்கள் பயணிக்க வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே டிரான்சிட் பயணிகள் தரப்பில் வெளியில் செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது உள்நாட்டு விமான நிலையத்தில் டிரான்சிட் பயணிகள் வெளியே செல்லாமல் வருகை பகுதியில் இருந்து நேரடியாக புறப்பாடு பகுதியின் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்கான புதிய வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மும்பை விமானத்தில் வரும் ஒரு பயணி மதுரை விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் வெளியில் செல்லாமல் உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியில் சென்று மதுரை விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள் வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில் ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு மற்றொரு உள்நாட்டு விமானத்தில் புறப்பட்டு சென்று பயணம் செய்ய முடியும். இந்த வசதி உள்நாட்டு விமான பயணிகளில் டிரான்சிட் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. புறப்பாடு விமானத்தை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இனிமேல் பயணிகள் பயணிக்க வேண்டியது இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!