கரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு, சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. இந்நிலையில், இதுவரை அதிகபட்சமாக 48 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 58 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, வாரணாசி, அந்தமான், ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 29 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பயணிக்க சுமாா் 3,500 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
அதேபோல், வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து இன்று சென்னைக்கு 29 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்க சுமாா் 1,800 போ் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். 58 உள்நாட்டு விமானங்களில் சுமாா் 5,300 போ் பயணம் மேற்கொள்ளும் நிலையில், சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
இதில், கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் விமானத்தில் ஏழு பேரும், கவுஹாத்தியிலிருந்து சென்னை வருவதற்கு எட்டு பேரும், தூத்துக்குடியிலிருந்து சென்னை வருவதற்கு 10 பேரும், மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு 18 பேரும் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா்.
போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இன்று கோவைக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணிக்க 180 பேரும், கவுஹாத்திக்கு 176 பேரும், மதுரைக்கு 92 பேரும், தூத்துக்குடிக்கு 56 பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.
சென்னையில் தற்போது அதிகரித்து வரும் கரோனா தொற்று பீதிதான், சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதன் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்த வங்கதேசப் பயணி: தொடரும் விசாரணை