சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும் கடத்தல்காரர்களில் சிலருக்கு விமான நிலைய சுங்க அலுவலர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியா, இலங்கை, துபாய் ஆகிய விமானங்களில் வந்த பயணிகள் சுங்கச் சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவனர்.
மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 18 பயணிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 12 கிலோ தங்கக் கட்டிகள், எலக்ட்ரானிக் பொருள்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவர்கள் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் குருவிகள் என்றும் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களை கடத்தி வருபவா்கள் என்றும் மேலும் சுங்கத்துறையில் பணிபுரியும் சில அலுவலர்களின் உதவியுடன் கடத்தல் பொருள்கள் வெளியே கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஐந்து சுங்கத்துறை அலுவலர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இரண்டு அலுவலர்கள் வடமாநில கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போனதாக தெரியவந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர் விசாரணை முடிந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 12 கிலோ தங்கத்துடன் 18 பேரையும் அலுவலர்கள் வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது, வெளியே நின்றிருந்த குருவிகளின் உறவினர்களுக்கும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்குமிையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவர்களை தாக்கிவிட்டு 18 பேரும் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர் பிரதிவிராஜ் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, விமான நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி கழிவறையில் செல்லிடப்பேசியில் வீடியோ எடுத்தவர் கைது!