சென்னை: ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், இன்று இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல இருக்கும், ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தையும், பயணிகளையும் தீவிரமாக சோதனை நடத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, கடந்த ஓராண்டாக மும்பை - சென்னை, மும்பை - பெங்களூர், சென்னை - பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, உள்நாட்டு விமான சேவைகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.29) அந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் X வலைத்தளப்பதிவில், ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, இன்று நடு வானில் பறந்து கொண்டிருக்கும்போது, வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று ஒரு மிரட்டல் பதிவு போடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இந்தப் பதிவை ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பார்த்துவிட்டு, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதை அடுத்து ஆகாஷா விமான நிறுவனம், தங்களுடைய விமானங்கள் இயக்கப்படும் மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களுக்கு அவசரமாக தகவல் அளித்துள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து, ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் இன்று இரவு 9 மணிக்கு, மும்பைக்கு ஒரு பயணிகள் விமானத்தை மட்டும் இயக்குகிறது.
எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 9 மணிக்கு மும்பை புறப்பட்டுச் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்ய இருக்கும் அனைத்துப் பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் தீவிரமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்த இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், அந்த விமானத்தையும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி, அதன் பின்பே சென்னையில் இருந்து மும்பை செல்ல அனுமதிப்பார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விமானம் இரவு 8 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டுச் செல்லும்.
மேலும் இந்த X பதிவு, அந்த விமான நிறுவனத்தின் X பதிவில்தான் வந்துள்ளது. இது அந்த விமான நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் யாராவது, இந்த மிரட்டல் பதிவை போட்டிருக்கலாம். இது வெறும் புரளியாகத்தான் இருக்கும் என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதோடு, அந்த X பதிவில் எந்த விமானம்? எந்த எந்த விமான நிலையத்தில் இருந்து எங்கு செல்லும் விமானம்? எந்த நேரம்? என்று எதுவும் குறிப்பிடவில்லை. இது அதிகாரிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து, மும்பையில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அந்த விமானம் இரவு 9 மணிக்கு மும்பைக்கு செல்லும் ஒரு விமானம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: