சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்லவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விமானம் 5 மணி நேரம் தாமதம் ஆகியதால் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
சென்னையிலிருந்து மதுரை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்த தமிழ்நாடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உட்பட 38 பயணிகள் தங்களுடைய ஏர் இந்தியா விமான பயணத்தை ரத்து செய்து விட்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றனர்.
சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று (நவ.7) காலை 11:30 மணிக்குச் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் தமிழ்நாடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உட்பட 142 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து ஓடு பாதையில் ஓடத் தொடங்கிய விமானத்தை, அவசரமாக நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானம் இழுவை, வண்டி மூலமாகப் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானம் தாமதமாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.
இதையடுத்து தமிழ்நாடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உட்பட 38 பயணிகள், தாங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க விரும்பவில்லை என்று கூறி, தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு, கீழே இறங்கி, மாற்று விமானமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டுச் சென்றனர்.
மேலும் 104 பயணிகள் விமானத்திலேயே இருந்து தவித்துக் கொண்டு இருந்தனர். அதன்பின்பு, மாலை 4:30 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் பழுது பார்க்கப்பட்டு 104 பயணிகளுடன், 5 மணி நேரம் தாமதமாக, சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். விமானம் ஓடு பாதையில் சென்ற போது விமானி விமானத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: டிபன் பாக்ஸில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு.. மதுபோதையில் உளறிய ரவுடி - நடந்தது என்ன?