மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான மரகதம் குமரவேலை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நேற்று (ஏப்ரல் 3) மாலை, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில் ’’தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 70 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். மு.க. ஸ்டாலின் அரசியல் வியாபாரி. வன்னியர்களின் 40 ஆண்டு போராட்டத்திற்கு செவி சாய்த்து, 10.5% இட ஒதிக்கீடு அளித்தவர் எடப்பாடி பழனிசாமி.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது, சாதி பிரச்னை அல்ல. அது சமூகப் பிரச்னை. வன்னியர்களுக்கு மட்டுமன்றி, இதுபோலவே சமூகத்தில் பின்தங்கியிருக்கும் அனைத்து பிரிவினருக்கும், இட ஒதுக்கீடு என்பது அவசியமாகும். மேலும், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு அளித்தவரும் எடப்பாடி பழனிசாமிதான்.
திமுக பெண்மையை, தாய்மையை மதிக்க தெரியாத கட்சி. அதற்கு உதாரணம்தான் சில நாள்களுக்கு முன்பு ஆ.ராசா, முதலமைச்சரின் தாயைப் பற்றி கொச்சையாக பேசியது. திரைப்பட நடிகை நயன்தாராவைப் பற்றி ராதாரவி பேசியபோது, உடனடியாக அவர் மீது திமுக நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கியது. ஆனால், முதலமைச்சரின் தாயாரைப் பற்றி பேசிய ராசாவை யாருமே கண்டுகொள்ளவில்லை.
அதுமட்டுமல்லாமல், முதலமைச்சராகும் எந்தவிதத் தகுதியும் ஸ்டாலினுக்கு கிடையாது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று திமுக கேட்கிறது. ஆனால், பழனிசாமி முதலமைச்சராகி நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. அவருக்கு இன்னொரு ஐந்து ஆண்டு காலம் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'எலெக்ஷன் 'கமிஷன்' என ராகுல் ட்வீட்!