சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதார துறை சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 320 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் திட்டம், புதிய பிரதான வழங்கு கால்வாய் அமைக்கும் திட்டம், வறட்சி பகுதிகளில் நீர் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 943 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள், படுகை அணைகள், கால்வாய்கள், நீரொழுங்கிகள், நீர் செறிவூட்டும் கட்டுமானங்கள், கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றை அமைத்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் , சின்னாற்றிலிருந்து கிடைக்கப்பெறும் உபரி நீரை ஜெர்தலாவ் கால்வாய் நெடுகை 5 கிலோ மீட்டரில் 30 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைத்து , எர்னஹள்ளி ஏரி , புலிக்கரை ஏரி மற்றும் இதர 12 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு நீர்வழங்க பெண்ணையாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து வலதுபுறம் 8.80 கிலோ மீட்டரில் 56 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒரு புதிய பிரதான வழங்கு கால்வாய், கிருஷ்ணகிரி வட்டம், எண்ணேகொல் அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறத்திலிருந்து 233 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய், அமைத்து தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி