சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் உடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
வடகிழக்கு பருவமழை: கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பெய்த மழை அளவு 37 செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 38 செ.மீ ஆகும். இது இயல்பை விட 3 சதவீதம் குறைவு எனக் கூறப்படுகிறது.
மழைப் பதிவு: சென்னையில் 1,077 மி.மீ மழையும், கோவையில் 415.8 மி.மீ மழையும், செங்கல்பட்டில் 728.6 மி.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 683.7 மி.மீ மழையும், கன்னியாகுமரியில் 886.2 மி.மீ மழையும், திருவள்ளுரில் 748.4 மி.மீ மழையும் இதுவரை பதிவாகியுள்ளது. மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர் பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவே மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை: தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதேபோல, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் பகுதியில் 11 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை பொதுப்பணித்துறை 8 செ.மீ மழையும், கச்சிராப்பாளையம், நாகை மாவட்டம் திருக்குவளை தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: டிசம்பர் 9ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: "மூன்று நாளாக மின்சாரம் இல்லை" - இருளில் தவிக்கும் கொரட்டூர்