சென்னை: கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(ஏப்.24) ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஏப்.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.25, 26 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் Dscl கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), PWD மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 9 செ.மீ, கிண்ணக்கொரை (நீலகிரி), பொன்னனியாறு அணை (திருச்சி), கெட்டி (நீலகிரி) தலா 8 செ.மீ, காட்டுமயிலூர் (கடலூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ, செங்கம் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை) 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Lingusamy: செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டணைக்கு தடை!
இதையும் படிங்க: Kochi Water Metro: நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?
இதையும் படிங்க: G Square IT Raid: ஜி ஸ்கொயர் நிறுவனம், திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஐடி ரெய்டு!