கரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்து, அதை செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொது வெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளை பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.
1939ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்த சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆர். முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (நவ. 3) விசாரணைக்கு வந்தபோது, எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை எனவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் பிரிவு 138இல் கொண்டுவந்த திருத்தத்தின்படி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் மட்டுமே அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஏற்கனவே, 10 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அபராதம் விதிக்க அறிவிப்பாணை பிறப்பித்திருப்பது மீண்டும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை போல இருப்பதாகவும், எந்த தவறும் செய்யாமல் மக்கள் தண்டிக்கப்படுவதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு அரசு தரப்பில், கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றிற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?