2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன், நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை. வெளிப்படையான விளம்பரத்தை வெளியிடாமல் ஏற்கனவே ஒருவரை முடிவுசெய்த பின் தேர்வுக் குழுவை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் புறக்கணித்த நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், 10 ஆண்டுகள் பணி அனுபவமுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில், 2 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்டவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர் சிராஜுதீன் வாதிட்டார். பின்னர், அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும், நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!