நீட் விவகாரம், மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு ஆகிய விவகாரங்கள் தமிழ்நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை மத்திய அரசு மாணவர்கள் மீது திணித்துள்ளது. நீட் தேர்வு ஆணையம், மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால், தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்.
இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை வஞ்சித்து பாஜகவிற்கு துதிபாடிக் கொண்டிருப்பார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.