சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, ''கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது. கள்ளர் சீரமைப்புத்துறைக்கான செயலாளர் தலைமையில் அப்பள்ளிகள், தொடர்ந்து அதே பெயரில் இயங்க வேண்டும். இக்கோரிக்கையினை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம்.
தமிழ்நாட்டில் DNC பட்டியலில் உள்ள 68 பிரிவினருக்கும் DNT சான்றிதழ் வழங்க வேண்டும். DNT சான்றிதழை பெறுவதன் மூலம் மத்திய அரசுப் பணிகளில் DNC மக்கள் தனி இட ஒதுக்கீடு பெற முடியும். மத்திய அரசு விவசாயிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. முதலமைச்சரின் இரண்டு கால ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் வகையில் உள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் தற்கொலை செய்துகொண்டால் என்னவாகும் - படவிழாவில் பகீர் கிளப்பிய சாந்தனு!