சென்னை: ஒன்றிய அரசால் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய திறனறிதல் தேர்வு இன்று (நவ. 12) நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைக் கணக்கிட்டு, அதைக் குறைக்கும் வகையில் தேசிய திறனறிதல் தேர்வு (National Achievement Survey) நடத்த முடிவுசெய்யப்பட்டது.
3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் இன்று இத்தேர்வு நடைபெறவிருந்தது. வடகிழக்குப் பருவமழையால் பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இன்று தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என பெற்றோர்கள், மாணவர்களுக்கு குழப்பம் நீடித்துவந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த தேசிய திறனறிதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்படாத மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: தன்னை விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு