சென்னை: பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் அனுப்பலாம் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில, கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் விவரங்கள்
2021-2022ஆம் நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும். இதற்கு, http://scholarship.gov.in என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், தங்களுடைய சேமிப்புக் கணக்குடன் தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணைத் தங்களுடைய சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர்.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2021. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.11.2021' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்