சென்னை: பிரதமர் மோடியின் சாதனைகளை குறித்து 21 நபர்கள் எழுதிய கட்டுரையின் தொகுப்பான ‘மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற ஆங்கில நுாலின் அறிமுக நிகழ்ச்சி சென்னை போரூரில் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், 'தி இந்து' குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக துணைத்தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடியின் வெற்றி ரகசியம்: இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேடையில் பேசியதாவது, “பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் அடிப்படைகளை மாற்றுவதற்கு வந்திருக்கிறார். இன்று ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. மக்களே பத்திரிகையாளராக மாறி, அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்து விமர்சிக்கின்றனர். கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு நாட்டில் ஜனநாயகம் மிக வலுவாக உள்ளது.
குஜராத் முதலமைச்சராகவும், பிரதமராகவும் மோடியின் 20 ஆண்டு கால சாதனைகள் குறித்து ‘மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்னும் நூலில் விரிவாக பலர் எழுதியுள்ளனர். தோல்வியே இல்லாமல் 22 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர், பிரதமர் ஆகிய பதவிகளில் தொடர்வது சாதாரணமான விஷயம் அல்ல. ஏழைகளின் கஷ்டங்களை அனுபவித்தவர் மோடி. ஏழைகளின் தேவை என்ன என்பதை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில்தான் மோடியின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.
'ஊழல் என்ற பேச்சே இல்லை': நான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. உலக பொருளாதார நெருக்கடியால் 2013இல் இந்தியா தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியில் இருந்தவர்கள் அதை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். கரோனா பேரிடர், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றால் அதை விட 100 மடங்கு நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். கரோனா பொது முடக்கத்தால் வளர்ச்சி அப்படியே நின்றுபோனது. ஆனால், பிரதமர் மோடியின் தளராத முயற்சியாலும் நாட்டு மக்களுக்கு அவர் அளித்த நம்பிக்கையாலும் தற்போது மீண்டெழுந்துள்ளோம்.
நாட்டில் 200 கோடிக்கும் அதிகமான 'டோஸ்'கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம். 2014-க்கு முன் எங்கும் ஊழல் நிறைந்திருந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஊழல் என்ற பேச்சே எங்கும் இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், கிராமத்திற்கும் மற்றும் வீட்டுக்கும் சென்று சேருவதை பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
டிஜிட்டல் புரட்சி: குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு வழங்க முன்வந்தார். அப்போது, அன்றைய மத்திய அரசு குறுகிய எண்ணத்துடன் அதை தடுத்து நிறுத்தியது. ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. ஒரு ரூபாய் கூட இருப்பு இல்லாத கணக்குகளால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும் என்றனர். ஆனால், இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இன்று ஜன்தன் வங்கி கணக்குகளில் 1.60 லட்சம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
அதேபோல் 'ரூபே' அட்டை மற்றும் 'க்யூஆர் கோடு' வாயிலாக பெரும் டிஜிட்டல் புரட்சியே நடந்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிராமங்களில் எப்படி சாத்தியமாகும் என கேலி செய்தனர். ஆனால் இன்று கிராமங்களில் அரை கிலோ வெண்டைக்காய் வாங்கினாலும், மொபைல் போனில் 'க்யூஆர் கோடு' வாயிலாக பணம் செலுத்துகின்றனர். 70 ஆண்டுகளாக பத்ம விருதுகள் செல்வாக்கான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், சாதனை படைத்த சாதாரண நபர்களுக்கும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுவும் ஒரு வகையான அரசு நிர்வாக மாற்றமாகும்.
அனைத்து நாடுகளிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறையும் என கணித்துள்ள சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எப்., இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், உலகிலேயே அதிக அளவாக 7.2 சதவீதம் இருக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்கிறது. காமராஜர், எம்.ஜி.ஆர்., போன்ற மக்கள் தலைவர்கள் கண்ட கனவுகளை மோடி நனவாக்கி வருகிறார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: ”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்