சென்னை: பிரபல விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனம் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட். இதன் நிர்வாக இயக்குநர் விஜிபி பாபு தாஸ். இவர் மீது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர், ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக புகார் கொடுத்திருந்தார்.
பண மோசடி
அதில், விஜிபி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனமான பிஎன்பி என்ற நிறுவனத்தின் இயக்குனர் மது என்பவர் மூலம் இந்தப் பணத்தை கொடுத்ததாகவும், குறிப்பாக விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துக்களின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, 2017 ஆம் ஆண்டு 70 லட்ச ரூபாய், 50 லட்ச ரூபாய் மற்றும் 60 லட்ச ரூபாய் என மூன்று தவணைகளில் பணத்தை கொடுத்ததாகவும் கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த விஜிபி பாபு தாஸ், அதன்பின் பணத்தை கேட்கும் போது , தன்னை சந்திக்க மறுத்ததாகவும், தனது அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
விசாரனை
இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விஜிபி குடும்ப நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சைதாப்பேட்டையில் உள்ள விஜிபி குழுமத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
இதில், புகார் அளித்த கிருஷ்ணராவ் கொடுத்த சொத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து சோதனை, விசாரணை நடத்தினர். சுமார் நான்கு மணி நேரம் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு