கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சில மாதங்களுக்கு முன் கந்தசஷ்டி கவசம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டனர். இது இந்து மத கடவுளைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும், காணொலி வெளியிட்ட நபர்களைக் கைதுசெய்து சேனலை தடைசெய்ய வேண்டும் எனவும் பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் செந்தில்வாசன் என்பவரை சென்னையில் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அந்தக் காணொலியைத் தொகுத்து வழங்கிய சுரேந்திரனை காவலர்கள் தேடி வந்த நிலையில் அவர், புதுச்சேரியில் உள்ள காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 2017ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரால் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டதும், சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது அலுவலகம் தியாகராய நகர் நியூ போக் சாலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் சுரேந்திரனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்குச் சென்று சோதனை நடத்தியதில், அலுவலகத்தில் பயன்படுத்திவந்த கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பணிப்புரிந்த ஊழியர்களே எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக உருவாக்கப்பட்ட முக்கிய ஆவணங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அலுவலகம் செயல்பட்டுவந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தபோது, கார்த்திக் என்பவர் கறுப்பர் கூட்டம் சேனலை உருவாக்கி இரண்டு ஆண்டுகளாக அலுவலகத்தை நடத்திவந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி, அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.
மேலும் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளைச் சேகரித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்துள்ளதா என்றும் விசாரித்துவருகின்றனர். இதுமட்டுமில்லாமல் வங்கிக் கணக்குகளை முடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களைக் கண்டறியும் பணியிலும், சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.