கரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக அவற்றை எடுத்துச் செல்லவும், அவற்றை கடல், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 13ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி மற்றும் அரசிடம் மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'ஸ்டாலின் விநாயகரை வழிபட வேண்டும்’ - இந்து முன்னணி கட்சி கோரிக்கை!