சென்னை: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் விக்னேஷ் என்பவர் நேற்று (செப். 6) அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் திரையரங்குக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
காரில் ஈசிஆர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் பனையூரை கடக்கும் போது சாலையின் முன்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் சிலர் வளைத்து வளைத்து ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்பொழுது காரில் சென்ற வழக்கறிஞர் விக்னேஷ் ஹாரன் அடித்ததாகவும், அப்போதும் அவர்கள் ஒதுங்காததால் இரண்டு, மூன்று முறை ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹாரன் அடித்தது குற்றம் என காரை நிறுத்தும் படி இளைஞர்கள் மிரட்டியும், விக்னேஷ் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் அதனால் காரின் பின்னால் சென்று காரை தட்டி இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இளைஞர்கள் செய்யும் அடாவடியால் பயந்து உத்தண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் காரை வழக்கறிஞர் விக்னேஷ் பாதுகாப்புக்காக நிறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பழிக்குப் பழி கொலைகள்.. அரசியல்வாதி டூ ரவுடி.. வி.கே.குருசாமியின் பின்னனி என்ன?.. ஒரு பார்வை..!
அப்பொழுது கார் பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர்கள் முதலில் வந்து விக்னேஷ் மற்றும் அவரது மைத்துனர் லலித் இருவரிடமும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த இளைஞர்கள் தொலைபேசி மூலம் இன்னும் கூடுதலாக அவர்களுடைய நண்பர்களை வரவழைத்து வழக்கறிஞர் விக்னேஷ் மற்றும் அவருடைய மைத்துனர் லலித் இருவரையும் தாக்கி உள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களுக்குள் கொடூரமாக தாக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்றனர். பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவில் காரில் வந்த நபர்களை கண்மூடித்தனமாக சரமாரி தாக்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.
சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் ஈசிஆர் சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதும், சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதும் வாடிக்கையாக வைத்து உள்ளனர். இதற்கு முறையாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுகொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!