சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (28). இவர் பல்லாவரம் பஜார் ரோட்டில் ஸ்ரீ அன்னை எண்டர்பிரைஸ் என்ற பெயரில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று (ஜனவரி 3) அடையாளம் தெரியாத நபர் இருவர் சென்று 5 கிலோ சிமெண்ட் வேண்டும் என கேட்டுள்ளனர்.
அப்போது, கடையில் உரிமையாளர், சிமெண்ட் எடுப்பதற்காகக் கடையின் உள்ளே சென்று 5 கிலோ சிமெண்டை எடைபோட்டுக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர்கள் வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து கல்லாவை திறந்து பார்த்த அவர், கல்லாவில் பணம் இல்லாததை கண்டு அதிர்ந்து போனார்.
இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிமெண்ட் வாங்குவதற்காக வந்த இருவரும், கடை உரிமையாளர் கடைக்குள் சென்ற நேரத்தில், கல்லாவை திறந்து பணம் எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் பல்லாவரம் காவல் நிலையத்திற்குச் சென்ற ஜீவானந்தம், இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி ; சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு..