கஞ்சா வழக்கில் ரவுடி சங்கரிடம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்தனர். நியூ ஆவடி சாலையில் ரவுடி சங்கர் காவலரை தாக்கி தப்ப முயன்றபோது என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
காவல் துறையினர் திட்டமிட்டு சங்கரை சுட்டுக் கொன்றதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கும் தொடுத்தனர்.
இந்த வழக்கிற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அடுத்தகட்டமாக என்கவுன்டர் நடந்த நியூ ஆவடி சாலைப் பகுதியில் சிபிசிஐடி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து என்கவுன்டரில் ஈடுபட்ட காவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் ரவுடி சங்கர் உறவினர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.