நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்தாண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
விஜய் நிகழ்ச்சிக்கு வரும்போதும், விஜய் சேதுபதி வரும்போதும் இந்தப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பாடல்களின் உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனமும், அதற்கான காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் பெற்றுள்ளன.
இந்திய காப்புரிமைச் சட்டப்படி பாடல்களை காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்பதால், மாஸ்டர் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டும் பதிலளிக்காததால், சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்புப் பிரிவில் நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் புகாரளித்தது.
ஆனால் அவர்களின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. வழக்கு விசாரணை முடிவில் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் காப்புரிமைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின்கீழ் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்ஸ் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஓராள் உயரம், 4 கிலோ எடை' 2 கோடிக்கு உலாவிய மண்ணுளி பாம்பு!