கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பணிக்குச் செல்லாமல் குடும்பத்தோடு வீட்டிலேயே ஆண்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் மதுபானக்கடைகள் பல்வேறு மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளதால் குடித்துவிட்டு ஆண்கள் பலர் பெண்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
மேலும் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலான வீட்டு வேலைக்கு பெண்களை உட்படுத்தி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனால் குடும்ப வன்முறை தொடர்பாக அதிகமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
பெண்கள் மீது நடக்கும் வன்முறை தொடர்பாக 5740 புகார்கள்! இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு நாட்களில் மட்டும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 5740 புகார்கள் வந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 45 புகார்கள் வந்துள்ளதாகவும், அதிகபட்சமாக புதுகோட்டை மாவட்டத்தில் 1424 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் முதல் ஊரடங்கின் போது 1427 புகார்களும், இரண்டாம் ஊரடங்கின் போது 2852 புகார்களும் மற்றும் 3ஆம் ஊரடங்கின் போது 1461 புகார்களும் வந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெறப்பட்ட 5740 புகார்களில் சுமார் 5702 புகார்களுக்கு உடனடியாக காவல்துறையினர் தீர்வு கண்டுள்ளதாகவும், 38 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 38 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெண்கள் மீது வன்முறை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.