சென்னை: சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவில் மாநில இணை செயலாளராக உள்ளார். இவர், நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், கடந்த 3ஆம் தேதி திமுக எம்.பி ஆ.ராசா அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அறுவருக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை. சசிகலாவின் தயவின் பேரில் பதவிக்கு வந்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஊழல் நிறைந்த கட்சி அதிமுக, ஜெயலலிதா சிறைக்குச் சென்றவர். அதிமுகவினருக்கு 2ஜி வழக்கு குறித்து பேசத்தகுதியில்லை" என ஆ. ராசா தெரிவித்ததாக கூறியிருந்தா்.
புகார் மனுவின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (வேண்டுமென்றே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவது ஆதாயம் தேடுதல்), 505 (1) (b) (குறிப்பிட்ட அமைப்பையோ அல்லது மக்களையோ குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல்) ஆகியப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ராசா நாவை கட்டுப்படுத்த வேண்டும்: தமக யுவராஜா