சென்னை: விஷச்சாராய உயிரிழப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்க பேரணியாக சென்ற அதிமுகவினர் 5 ஆயிரத்து 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விஷச்சாராய உயிரிழப்பு, அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக, சென்னை சின்னமலையில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை உள்ள கிண்டிக்கு அதிமுகவினர் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் திரண்டனர்.
இந்த பேரணி நிகழ்ந்தபோது, சுமார் 5 ஆயிரத்து 500 பேர் கூடியதாக கூறப்படும் நிலையில் கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் எந்த வித முன் அனுமதியும் இன்றி திடீரென 5 ஆயிரத்து 500 பேர் கூடி பேரணியாக சென்றதால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூட்டத்தை கூட்டுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முன்னதாக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாரை அளித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. உதாரணமாக, தூத்துக்குடியில் மணல் கொள்ளையத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டார். சேலத்தில் கிராம நிர்வாக அலுவலர் மீது கொலை முயற்சி நடந்தது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த விவகாரத்திலேயே தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கி வந்த பாரில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இவை அனைத்தும் காவல் துறைக்கு தெரிந்தே நடைபெற்று வருகிறது என்பதால், இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்.
சென்னையில் 97 பார்கள் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமாக 75 சதவீதம் பார்கள் முறையான அனுமதி இன்றி இயங்கி வருகிறது. மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஜி ஸ்கொயர், ரெட் ஜெயண்ட் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அமைப்புகள் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் அளித்த புகார்களை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு - சிவி சண்முகம் குற்றச்சாட்டு