சென்னை காவல் துறையின் எல்லைக்குள்பட்ட 30 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோரை கண்காணிக்க காவல் ஆணையரகத்தில் தேர்தல் பிரிவு செயல்பட்டுவருகிறது.
வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா, வாகன சோதனையில் ஈடுபடுவது எனப் பல்வேறு பணிகளில் தேர்தல் அலுவலர்களுடன் காவல் துறையினர் இணைந்து 48 பறக்கும்படை செயல்பட்டுவருகிறது.
அதுமட்டுமல்லாது தேர்தல் நேரம் என்பதால் உரிமம் பெற்ற 2,700 துப்பாக்கிகளை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், 800 துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி போஸ்டர், பேனர் வைத்ததினால் இதுவரை 106 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அசாம்பாவிதம் ஏற்படும் வகையில் உள்ள 150 ரவுடிகளைக் கண்டறிந்து கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளதாகத் தேர்தல் பிரிவு காவல் துறையினர் தெரவித்துள்ளனர். மேலும் இந்தச் சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.