சென்னை: மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் நேற்று அடித்து நொறுக்கி சூறையாடினர்.
அப்போது அங்கு குழுமியிருந்த தமுமுக, மமக தொண்டர்களிடையே கடும்மோதல் ஏற்பட்டது.
மமக நிர்வாகிகள் கைது
இதையடுத்து காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லவின் தூண்டுதலின் பேரில் தான் மமக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர் என தமுமுக மத்திய சென்னை மாவட்ட தலைவர் மீரான் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மமக துறைமுக பகுதி செயலாளர் சாகுல், மமக உறுப்பினர் ஹாஜி ஆகியோரை கைது செய்து ஜார்ஜ்டவுண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் சாகுல் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹாஜி மட்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல மமக நிர்வாகி அப்துல் மஜித் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஹைதர் அலி ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்தார்.
தமுமுக நிர்வாகிகள் மீது புகார்
இந்தப் புகாரின் பேரில் 20க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. மோதல் வீடியோ காட்சிகளை பார்த்து அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த மோதல் கல்வீச்சில் காயமடைந்த வடக்கு கடற்கரை காவல் நிலைய காவலர் அருண்குமார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவலர் அருண் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மீது வடக்கு கடற்கரை காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக சட்டப்பிரிவுகள் 147 கலகம் செய்தல், 148 பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், 294(பி) ஆபாசமாக திட்டுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 324 பயங்ர ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமுமுக vs மமக: பேனரால் வெடித்த போர்... அலுவலகம் சூறை..!