ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடித்துத் தரக்கோரி ஹென்றி தீபன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முகிலன் எங்கே இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விசாரணையை தொடரும்படி சிபிசிஐடி காவல் துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி திருப்பதியில் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கடந்த ஜூன் 6ஆம் தேதி முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரைச் சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7ஆம் தேதி அவரை கைது செய்து தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முகிலனை காவல் துறையினர் கண்டுபிடித்துவிட்டதால், இந்த வழக்கில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.