சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் அதிமுக சார்பில் கடந்த 11ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். பின்னர் விமான ஓடுபாதையில் இருந்து வெளியே வரக்கூடிய பேருந்தில் பயணம் செய்தார்.
அதே பேருந்தில் பயணம் செய்த அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் யோகம் ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் நேரலை செய்தார். அப்போது, "தற்போது நான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்" என பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜேஸ்வரனிடம் இருந்து செல்போனை பறித்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அதை, விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரனை கைது செய்தனர். இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் தனது செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தன்னை தாக்கியதாகவும் ராஜேஸ்வரன் தரப்பில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இன்று (மார்ச் 13) அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அவ்வை சண்முகம் சாலையில் இருந்து அண்ணா சிலை பேரணியாக சென்று அதிமுகவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயவர்தன், "திமுக அரசு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டுள்ளது. இதை அம்மா பேரவை சார்பாக வன்மையாக கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம். காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. உலக அளவில் நடிப்பிற்கான ஆஸ்கார் விருது வழங்கினால், அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கலாம்" என கூறினார்.
இதையும் படிங்க: "குளத்த காணோம், கண்டு பிடிச்சு கொடுங்க"- தென்காசி விவசாயிகள் கோரிக்கை