சென்னை: தேனாம்பேட்டை பாபு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நிலம் வாங்குவதற்காக வங்கியில் இருந்து நடராஜன் 8 லட்சம் ரூபாயை எடுத்து தனது கடையில் வைத்திருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நடராஜனின் வீட்டின் அருகே ராஜசேகர், மெரிட்டா புஷ்பராணி தம்பதி வசிக்கின்றனர். இவர்களது மகனுடன் நடராஜனின் மகன்கள், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நடராஜனின் மகன்கள் அதிகப் பணம் கொண்டு வருவதை அறிந்த மெரிட்டா புஷ்பராணி, மேலும் அதிகமான பணத்தைக் கொண்டு வர கூறியுள்ளார். மேலும் அதிகப் பணம் கொண்டு வந்தால் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் போது சாப்பாடு, ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்டவற்றை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனால் சிறுவர்கள் தனது தந்தை நடராஜன் நிலம் வாங்க கடையில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை சிறுக சிறுக எடுத்து வந்து மெரிட்டா புஷ்பராணியிடம் கொடுத்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பு நடராஜன் கடையில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை பார்த்த போது காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே தனது மகன்களிடம் இதுகுறித்து கேட்டபோது, மெரிட்டா புஷ்பராணியிடம் பணத்தை கொடுத்ததாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடராஜன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மெரிட்டா புஷ்பராணி உள்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்