சென்னை: இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டன.
வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர். எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசின் அதிகாரம் பறிப்பு
அந்த மனுவில், "மாநில அரசு பட்டியலில் இருந்து கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது.
கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் எடுத்துகாட்டு
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மாநில மக்களின் கல்வித்தேவை, விருப்பம் ஆகியன சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த மனு, இன்று (செப்.14) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், அரசியல் சட்ட நிர்ணய சபையில் இதுசம்பந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும் எனவும், மாநிலங்களுக்கு ராணுவம், அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என ஒன்று, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: '5 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு' - அமைச்சர் பொன்முடி