சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் பெருமளவில் மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சிளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மழை நீர் வெள்ளப் பெருக்காக ஓடுகின்றன. மேலும் பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவு நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பெருகெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இதனை அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பல லட்சம் மதிப்பு உள்ள கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 குழுக்களாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது குடியிருப்பைச் சுற்றி வெளியேறும் நீரின் அளவு அதிக அளவில் இருப்பதால் உபகரணங்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட கால தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பை சுற்றி வெளியேறும் நீரின் அளவு குறைந்தவுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு கார்கள் மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு